மினுமினுக்கும் தங்க விளக்கை கையால் தடவினால் உள்ளிருந்து புன்சிறிப்புடன் வெளி வரும் மாய பூதம். அத்தகைய அலாவுதீனின் அற்புத விளக்கை ஒத்த வடிவிலான ஒரு நீர் குவளையை, காட்பாடியை அடுத்த கரிகிரி கிராமத்தைச் சேர்ந்த குயவர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்பாக உண்மையான மாயாஜாலத்துடன் செய்துள்ளனர்.
அப்படி என்ன மாயாஜாலம் அது? 1,700களின் காலகட்டம், ஆற்காடு நவாபுகளின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. பொதுவாகவே மன்னர் என்றால் அவருக்கான பாதுகாப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கும். மெய் காப்பாளர்கள், கோட்டையை சுற்றி அகழி, சுரங்கப்பாதை என பல பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டிருக்கும். அது போன்ற பாதுகாப்பை நோக்கமாக கொண்டு வடிவமைக்கப்பட்டது தான் ’கரிகிரி மாயக்குவளை’.
வரலாற்று குறிப்பற்ற இந்த குவளை காட்பாடியை அடுத்த கரிகிரி கிராமத்தில் வாழ்ந்த, குறிப்பிட்ட சில குடும்பத்தினரால் மட்டுமே செய்யப்பட்டது என்கிறார், வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன். இந்தக் குவளையில் உள்ள தண்ணீரில் யாரும் விஷத்தை கலந்துவிடக்கூடாது என்பதற்காக, தண்ணீரை நிரப்ப ஒரு வழியும், வெளியேற்ற மற்றொரு வழியும் அமைக்கப்பட்டுள்ளதால், இதனை மாய நீர் குவளை என்பதாக விளக்கினார் அவர்.