வேலூரில் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை பாதி அளவிற்கு மட்டுமே நடத்திவிட்டு, மீதமுள்ள பகுதிகளுக்குத் தேர்தலை நடத்தாமல் அரசு ஒன்றரை ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகிறது. இது மிகப்பெரிய ஜனநாயக சிதைவாகவே பார்க்கப்படுகிறது. எனவே, உடனடியாகத் தேர்தல் நடத்த வேண்டும்.
பட்டியலின மக்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களை வாக்கு இயந்திரங்களாக மட்டுமே பார்க்கிறார்கள். சாதிய வன்கொடுமைகள் இந்தியாவில் அதிகம் நடந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சாதிய ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் பேட்டி தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஒத்துழைப்பு கொடுத்ததை மறுக்க முடியாது. அப்போது விஜய்யின் ரசிகர்கள் அதிமுகவுக்கு வாக்கு வங்கியை அதிகப்படுத்தி கொடுத்தார்கள். அதேபோன்று ரஜினிக்கு மக்களிடம் செல்வாக்கு உள்ளது. அவர் அரசியலுக்கு வந்து களம் காண ஜனவரி, பிப்ரவரியில் கூட வாய்ப்பு உள்ளது" என்றார்.
'எழுவர் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்!'
மேலும், "மனிதாபிமான அடிப்படையில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் விடுதலையில் திமுக கூட்டணியில் ஒத்தக் கருத்து இல்லை. பாஜகவுக்கும் தெளிவான கருத்து இல்லை. இனியும், அவர்களை சிறையில் வைத்திருப்பது சரியல்ல" என்றார்.