வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விகே.தாமோதர புரம். மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில்தான் இன்றளவும் பஞ்சாயத்து மூலம் நாட்டாமை தீர்ப்பு வழங்கி பொதுமக்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கும் சம்பவம் அரங்கேறிவருகிறது.
அந்தவகையில், அந்த ஊரைச் சேர்ந்த பத்மநாபன், அவரது லதா, அவரது 11 வயது மகன் நிர்மல்ராஜ் ஆகிய மூவரும் நாட்டாமையால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அவலம் அரங்கேறியுள்ளது. பத்மநாபன் குடும்பத்திற்கும் பக்கத்து வீட்டுக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக காவல்நிலையத்தில் பத்மநாபன் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக வேலூர் நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நான் இருக்கும்போது எப்படி காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று ஆத்திரம் அடைந்த நாட்டாமையான சலோபரி, லதாவை பஞ்சாயத்திற்கு அழைத்து பொதுமக்கள் முன்னிலையில் தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும் வழக்கை திரும்ப பெறாவிட்டால் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
இதில் லதா வழக்கை திரும்ப பெற முடியாது என கூறியதால், லதா மற்றும் அவரது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து நாட்டாமை சலோபரி தீர்ப்பளித்துள்ளார். அது மட்டுமின்றி உடனடியாக வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் உயிருடன் வைத்துக் கொளுத்திவிடுவோம் எனவும் நாட்டாமை தரப்பு மிரட்டியுள்ளனர்.
காவல் நிலையம் சென்ற குடும்பத்தை ஒதுக்கி வைத்த நாட்டாமை! இதனால் வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊர் நாட்டாமை தரப்பில் இருந்து தனக்கு வரும் மிரட்டல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் பத்மநாபன்-லதா வேண்டுகோள் விடுத்துள்ளனர்.