வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகர்மன்ற அவசரக் கூட்டம் இன்று (மே 09) நடைபெற்றது. இதில் நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் புகழ்பெற்ற குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவிற்கு தற்காலிக கடைகள் அமைக்க அனுமதி கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஷவர்மாக்கு தடை:மேலும் மன்ற உறுப்பினர்கள் பேசும்பொழுது, சிக்கன் வகைகளில் ஒன்றான ஷவர்மாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் அதற்கு குடியாத்தம் நகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து இதுகுறித்து மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது சுகாதாரதுறைக்கு இதுபோன்ற கடைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
குடியாத்தம் நகராட்சியில் நடந்த நகர்மன்ற அவசரக் கூட்டத்தில் முடிவு மீறினால் கடைக்கு சீல்: கூட்டத்தில் குடியாத்தம் நகரமன்ற தலைவர் சௌந்தர்ராஜன் பேசுகையில், 'பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட இளைஞர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஷவர்மாவால் உடல் உபாதைகள் ஏற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, உடலுக்கு தீங்கு ஏற்படும் சிக்கன் வகைகளில் ஒன்றான ஷவர்மாவை குடியாத்தம் நகராட்சியில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது. மேலும் சுகாதாரமற்ற முறையில் அசைவ உணவுகளை விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார். கேரளாவில் கெட்டுப்போன சிக்கன் ஷவர்மாவால் மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழகத்திலும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: ஷவர்மா விற்பனைக் கூடங்களுக்கு ரூ.20,000 அபராதம்; உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி