வேலூர் மாவட்ட திமுக சட்டத்துறை சார்பில் இன்று, மத்திய மாவட்ட அலுவலகத்தில் தேர்தல் அறை திறக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், ”இன்னும் சிறிது நாட்களில் ஜனநாயகம் இருக்காது, கட்சிகள் இருக்காது, சட்டமன்றம், நாடாளுமன்றம் இருக்காது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே இந்தியா என்ற அரசர் காலத்து ஆட்சியை உருவாக்க பார்க்கிறார்கள்.
உச்ச நீதிமன்றமே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறிய பிறகும், ஆளுநர் தனக்கு அதிகாரம் இல்லை, குடியரசுத் தலைவருக்கு தான் அதிகாரமிருக்கிறது எனக் கூறுவது ஏற்புடையதல்ல. மாநில அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால், அதை ஆளுநர் நிறைவேற்றுவது தான் வழக்கம். ஆனால், இந்த ஆளுநர் வித்தியாசமாக அதிமுக அரசை மதிப்பது போன்றும், மதிக்காதது போன்றும் நடந்து கொள்கிறார்.