வேலூர்:திருவண்ணாமலை மாவட்டம், பெரிய அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்த, அரசுப்பேருந்து ஓட்டுநரான செல்வம் (வயது 49), அம்பத்தூரில் இருந்து பேர்ணாம்பட் செல்லும் பேருந்தினை ஓட்டிச்சென்றுள்ளார். வேலூர் புதிய பேருந்து நிலையம் வந்தபோது, நுழைவு வாயிலில் பேருந்துகள் வரிசையாக நின்று கொண்டிருந்ததால், ஓட்டுநர் செல்வம் ஹார்ன் அடித்துள்ளார்.
அப்போது, பேருந்து நிலையத்திற்கு வெளியே டீக்கடை மற்றும் ஓட்டல் நடத்தி வரும் சக்திவேல், ராஜ்குமார் ஆகியோர், தங்கள் கடை முன்பு ஹார்ன் அடிக்கக் கூடாது எனக் கூறி, ஓட்டுநர் செல்வத்தை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. வாகன நெரிசல் அதிகமாக இருப்பதால், ஹார்ன் அடித்தால்தான் வழி கிடைக்கும் எனக் கூறி, ஓட்டுநர் மீண்டும் ஹார்ன் அடித்துள்ளார்.
இதனால் ஆவேசமடைந்த சக்திவேல், ராஜ்குமார் இருவரும், பேருந்திலிருந்து இறங்கிய ஓட்டுநர் செல்வத்தை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் ஓட்டுநரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. இதைக்கண்ட பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் தடுக்கச் சென்றபோது, இருவரும் தப்பியோடியுள்ளனர். பின்னர் படுகாயமடைந்த ஓட்டுநரை, சக ஓட்டுநர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அரசுப்பேருந்து ஓட்டுநரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி, அரசுப்பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காட்பாடி-வேலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர், தப்பியோடிய சக்திவேல் மற்றும் ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சட்டவிரோத மது விற்பனைக்கு உடந்தையாக இருந்த ஆய்வாளர் சஸ்பெண்ட் - தஞ்சை சரக டி.ஐ.ஜி., கயல்விழி அதிரடி