வேலூர்: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தி இன்று தனது வாக்கினைப் பதிவுசெய்தார்.
திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகள் செந்தாமரை கதிர் தனது முதல் வாக்கைப் பதிவுசெய்தார். இவர் இன்று (ஏப்ரல் 6) தனது தாத்தா திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், குடும்பத்தினருடன் காட்பாடியில் உள்ள தனியார் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இதுவரை பிறர் வாக்களிப்பதைப் பார்த்து வந்த நான், இன்றைக்கு நானே என்னுடைய முதல் வாக்கினைப் பதிவுசெய்துள்ளேன். எனக்கு ஒரு பொறுப்பு வந்ததைப் போன்று உணர்கிறேன். இதேபோன்று அனைவரும் வாக்களித்தால் பெருமையாக இருக்கும்.
இன்றைக்கு காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் எனது தாத்தா துரைமுருகன், தந்தை கதிர் ஆனந்துடன் வந்து வாக்களித்ததைச் சிறப்பாகக் கருதுகிறேன். தாத்தா துரைமுருகன் மாநிலத்தின் மூத்த சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
இவை எல்லாம் அவருடைய பெரும் உழைப்பால் கிடைத்தது. மக்களுடைய ஆதரவு அவருக்கு உள்ளது. அவரது தொகுதிக்கு செய்த தொண்டின் காரணமாக அவர் இந்த இடத்தில் உள்ளார்.
மேலும், தொடர்ச்சியாக அவர் வேட்பாளராக நிற்கிறார் என்றால் மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டும் என்ற பேரார்வம் அவரிடம் உள்ளது. மக்களும் அவரைத் தொடர்ந்து ஆதரித்துவருகின்றனர். முக்கியமாக அவருடைய கட்சியின் தலைமையும், அவரை அதிகம் ஆதரித்துவருகின்றனர்.
மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்தின் மகள் செந்தாமரை கதிர் பேட்டி தொடர்ந்து அப்பாவும், தாத்தாவும் அரசியலில் உள்ளனர். இதுதான் எங்கள் வாழ்க்கை என்று ஆகிவிட்டது. நானும் அதில் வாக்களித்துப் பங்காற்றுகிறேன் என்னும்போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று கூறினார்.