தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கி நடைபெற்றுவருகின்றது. தகுதிக்கு ஏற்ற ஊதியம் வழங்குதல், நோயாளிகளில் எண்ணிக்கைக்கு ஏற்றபடி அரசு மருத்துவர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் சுமார் 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தால் மருத்துவமனையில் நோயாளிகள் அவதி டெங்கு காய்ச்சல் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு போன்றவற்றில் நோயாளிகள் பாதிக்கப்படாதவாறு நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியில் உள்ளனர். இருப்பினும் பிற மருத்துவ பிரிவுகளில் பெரும்பாலான மருத்துவர்கள் நேற்று பணிக்கு வராததால் நோயாளிகள் கடுமையாக அவதிப்பட்டனர்.
குறிப்பாக புறநோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சிகிச்சைப் பெற்றனர். மருத்துவர்களின் வேலைநிறுத்தம் நீடித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால் உடனடியாக அரசு, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.