வேலூர்:திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கடைசி சுற்றில் 746 வாக்குகள் முன்னிலை பெற்று அதிமுகவின் ராமுவைத் தோற்கடித்தார்.
வழக்குரைஞர், அரசியல்வாதி, பேச்சாளர் என, பன்முகத் திறன்களுடன் விளங்கும் துரைமுருகன் தற்போது திமுகவின் பொதுச் செயலாளராகவுள்ளார். அகவை 82 எட்டினாலும், துடிப்புடன் கட்சியினரிடையே பேசக்கூடியவர்.
7 ஸ்டார் வேட்பாளர்
திமுக தொடங்கப்பட்ட காலத்திலேயே, மறைந்தத் தலைவர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தவர் துரைமுருகன். 12 முறை தேர்தலில் களம் கண்ட இவர், காட்பாடி தொகுதியில் மட்டும் 9 முறை போட்டியிட்டு, 7 முறை வெற்றி பெற்று கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முக்கியத் துறைகளில் இடம்பெற்றவர்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தற்போது 10ஆவது முறையாகக் காட்பாடி தொகுதியில் களம் கண்ட அவருக்கு வெற்றிக் கனி எளிதில் கிடைத்துவிடவில்லை. வாக்கு எண்ணிக்கையின்போது, இறுதி வரை திணறினார் துரைமுருகன். ஏற்கனவே, இவருக்கு சீட் கொடுத்ததை விரும்பாத ஒரு சிலர், இவரின் புலம்பலை அறிந்து உள்ளுக்குள் புளகாங்கிதம் அடைந்தனர்.
டஃப் கொடுத்த ராமு
இவரை எதிர்த்து அதிமுக சார்பில் ராமு போட்டியிட்டார். நேற்று (மே.2) வாக்கு எண்ணிக்கைத் தொடங்கிய முதலாவது சுற்றில் இருந்து, எட்டாவது சுற்று வரை அதிமுக வேட்பாளர் ராமு முன்னிலை வகித்துவந்தார்.
அந்தச் சூழலில், 'என் மக்கள் என்னை மறந்துவிட்டனர், நான் அவர்களுக்கு என்ன குறை வைத்தேன்' என்றெல்லாம் துரைமுருகன் புலம்பியதாகக் கூறப்படுகிறது.
காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் ராமு லக்கி நம்பர் ’9 முதல் 20’
இருக்கத்தில் இருந்த அவருக்கு 9ஆவது சுற்றிலிருந்து ஏறுமுகம். அது 20ஆவது சுற்று வரை நீடித்ததால் ஆறுதல் அடைந்தார் துரைமுருகன். வெற்றி தன் பக்கம் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதாக விழிப்புடன் எதிர்பார்த்து காத்திருந்தார் துரை.
இதற்கிடையில், 1, 2, 11, 18 ஆகிய சுற்றுகளில் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதாகியதாலும், தபால் வாக்கு மற்றும் மின்னணு முறையில் செலுத்தப்படும் அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்கு சிறிது தொய்வு ஏற்பட்டதால், வாக்கு எண்ணிக்கையில் சிறிது தாமதம் ஏற்பட்டது.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தபால் வாக்குகளுக்கு முன்னதாக பழுதான 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளையும் எண்ணக்கோரி இரு கட்சியைச் சேர்ந்த முகவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மீட்சிகண்டு ஓய்ந்த ராமு
மீண்டும் 22ஆவது சுற்றிலிருந்து 25ஆவது சுற்று வரை அதிமுக வேட்பாளர் ராமு முன்னிலை வகிக்க, வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெரும் குழப்பமும், அமைதியும் சூழ்ந்தது. கடைசி நேரம் வரையிலும், அதிமுக வேட்பாளர் ராமுவே முன்னிலை வகித்தார்.
இறுதியாக, இரவு 9.45 மணிக்கு திமுக வேட்பாளர் துரைமுருகன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த ராமுவை 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக காட்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியக்கோடி அறிவித்தார்.
தொடர்ந்து அவரது வெற்றிக்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. இறுதியாக, திமுக வேட்பாளர் துரைமுருகன் 85 ஆயிரத்து 140 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராமு 84 ஆயிரத்து 394 வாக்குகளும் பெற்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலினுடன் துரைமுருகன் தபால் வாக்கே துரைமுருகனுக்கு பெரும் வெற்றியைத் தேடிதந்துள்ளது. தபால் வாக்கில் துரைமுருகன் 1,778 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராமு 608 வாக்குகளும் பெற்றனர். இதைத்தொடர்ந்து துரைமுருகன் தொடர்ந்து பத்தாவது முறையாக வெற்றி பெற்று, சட்டபேரவை உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார். காட்பாடி தொகுதியில் மட்டும் 8 முறை வெற்றியாளராக வாகை சூடியுள்ளார்.
ஸ்டாலின் துணை
வெற்றிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், “திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றதற்கு முதல் காரணமாக நான் கூறுவது எங்களுடைய கட்சியின் தலைவர் ஸ்டாலின் தான்.
எத்தனை தொகுதியில் எத்தனை பேர் வெற்றி பெற்றாலும், அத்தனை வெற்றியிலும் அவருடைய பங்குண்டு.
திமுக தலைவர் ஸ்டாலினுடன் துரைமுருகன் மன்னர் அலெக்சாண்டர் பல நாடுகளை வென்றான் என்றாலும், வென்ற ஒவ்வொரு நாட்டிலும் அவனுடைய பாதம் பற்றிருக்கிறது என்பதைக் கூறும். தேர்தலில் வென்றுள்ள நாங்கள் எல்லாம் ஸ்டாலினுடைய முயற்சியால், அவருடைய ஆதரவால் வெற்றி பெற்று இருக்கிறோம்.
எனவே, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் ஒரு புதிய ஆட்சி, மறுமலர்ச்சியுடன், புதிய சிந்தனையுடன், புதிய லட்சியத்தோடு செயல்பட போகிறது” என்றார்.