தமிழ்நாட்டில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. குறிப்பாக சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதுதொடர்பாக அந்தந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் பொதுமக்கள் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இதில் டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்களை மட்டும் வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைக்கின்றனர். இதற்கிடையில் டெங்கு பாதிக்கப்பட்டவர்களுக்காக மருத்துவமனையில் இரண்டு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி குழந்தைகள், பெரியவர்களுக்குத் தனித்தனியாக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாள்தோறும் பலர் டெங்கு பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்துவரும் நிலையில் அரசு தரப்பில் டெங்கு குறித்து முறையான அறிக்கை வேலூர் மாவட்டம் சார்பில் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இது குறித்து வேலூர் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் யாஷ்மினிடம் கேட்டபோது இதுவரை ஒரு நபருக்குக் கூட டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை, வைரஸ் காய்ச்சலால் தான் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் 245 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இன்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாவட்டம் முழுவதும் இதுவரை 245 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் கடந்த ஒரு வாரம் மட்டும் 16 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்துள்ளது என்று தெரிவித்தார்.
வேலூரில் டெங்கு பாதிப்பு இல்லை என்று மருத்துவ அலுவலர்கள் மறுத்து வந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியரே 245 பேருக்கு டெங்கு இருப்பதாக கூறிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே அரசு தீவிர நடவடிக்கை எடுத்து டெங்கு பரவாமல் இருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வேலையின்மை குறித்து மோடி பதிலளிக்க வேண்டும் - ராகுல் காந்தி