வேலூர்: காட்பாடி அடுத்த கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் வேலூர் ஆவின் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்களை பணிகளுக்கு அனுப்பி வருகிறார். இவர்களுக்கான ஊதியத்தை ஆவின் நிறுவனத்திடம் இருந்து காசோலையாக பெற்று அதிலிருந்து தன்னிடம் பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்கி வருகிறார்.
ஆவினில் இவர் ஒப்பந்த அடிப்படையில் அனுப்பிய ஆட்களுக்கு கடந்த சில மாதங்களுக்கான ஊதிய தொகை நிலுவையில் இருந்து வந்துள்ளது. இதுவரை நிலுவை தொகையான 5 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை வழங்க கோரி வேலூர் சத்துவாச்சாரியிலுள்ள ஆவின் நிறுவன உதவி பொது மேலாளர் மகேந்திரமால் (57) என்பவரிடம் ஜெயச்சந்திரன் பலமுறை கேட்டு வந்துள்ளார்.
லஞ்சம் கேட்ட அலுவலர் கைது
இது குறித்து மகேந்திரமாலிடம் கேட்டபோது காசோலையை வழங்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன், வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார்.
இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெயச்சந்திரனிடம் கொடுத்து அனுப்பினர். அதன்படி ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன் நேற்று (நவ 09) ஆவின் உதவி பொது மேலாளர் அலுவலகத்தில் மகேந்திரமாலிடம், அந்த நோட்டுகளை கொடுத்துள்ளார்.