மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், ஈழத் தமிழர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதாகக்கூறி, சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள், எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
கடலூர்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி கடலூரில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பேரணியாக சென்று, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
திண்டுக்கல்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல்லில் ஜமாஅத்துல் உலமா சபை, அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறை படுத்தக்கூடாது என்றும், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் திருப்பூர் அனைத்து ஜமாத் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.