வேலூர் திருப்பத்தூரை அடுத்த கவுண்டப்பனூர் செவத்தான் வட்டத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(40). இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், அன்புராதா, கவியரசன் என இரண்டு குழந்தைகளும் உள்ளன. இவர் குடும்ப வறுமையினால் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். 19 தினங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்துள்ளார் ரமேஷ்.
இந்நிலையில் கவுண்டப்பனூர் காளியம்மன் கோயிலில், மூன்று தினங்களுக்கு முன்பு கவுண்டப்பனூர் தலைவர் வட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(45) என்பவர் மது அருந்தி விட்டு கோயில் அருகில் அமர்ந்து பீடி புகைத்திருக்கிறார். இதனருகில் ரமேஷ் இருந்த நிலையில், கிருஷ்ணனைப் பார்த்து 'கோயில் அருகில் பீடிப் புகைக்காதே, வேறு இடத்திற்குச் செல்' எனக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் பீடியைப் புகைத்து ரமேஷின் முகத்தில் ஊதியுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் கழித்து, கிருஷ்ணன் தான் வைத்து இருந்த கத்தியால் ரமேஷை சரமாரியாகக் குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.