தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

’சர்கார்’ பாணியில் வாக்களித்த வங்கி ஊழியர்! - 49பி வாக்கு

வேலூர்: கள்ள ஓட்டால் வாக்களிக்கும் உரிமையிழந்த வங்கி ஊழியர் ’சர்கார்’ திரைப்பட பாணியில் 49P என்ற அடிப்படையில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

49p
49p

By

Published : Apr 7, 2021, 7:52 AM IST

வேலூர் சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்தவர் லோகேஷ் நிவாசன். வங்கி ஊழியரான இவர் சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு தனது வாக்கை செலுத்த சென்றார். ஆனால், ஏற்கனவே அவரது வாக்கை யாரோ கள்ளத்தனமாக பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த லோகேஷ், தான் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தார்.

இது தொடர்பாக, அந்த வாக்குச்சாவடியில் இருந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மத்தியில் வாக்குவாதமும், சலசலப்பும் சிறிது நேரம் ஏற்பட்டது. இதையடுத்து லோகேஷுக்கு ’49P’ என்ற அடிப்படையில் வாக்களிக்கும் உரிமையை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் சுப்புரத்தினம் வழங்கினார். அதன்படி, ஆய்வுக்குரிய வாக்குச்சீட்டு (49P) என்ற அடிப்படையில், வாக்குச்சீட்டு மூலம் தனது வாக்கை லோகேஷ் பதிவு செய்தார்.

49P முறையில் பதிவு செய்யப்பட்ட வாக்கு:

49P அடிப்படையில் அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டு இருக்கும் உறை தனியாக வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாக்கப்படும். வாக்கு எண்ணும் நாளில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவுகள் எண்ணப்படும். இதில், அதிக வாக்குகள் பெறும் முதல் இரண்டு பேருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சமமாக இருந்தால் மட்டுமே இந்த 49P வாக்குச்சீட்டு உறை பிரிக்கப்பட்டு, அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை பார்த்து அந்த வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும். அதிக வாக்குகள் பெறும் முதல் இரண்டு வேட்பாளர்களின் இடையிலான வாக்குகள் வித்தியாசம் அதிகமாக இருந்தால், இந்த 49P உறை கடைசி வரை பிரிக்கப்பட மாட்டாது. 49P என்பது வாக்குரிமை இழந்த நபரை திருப்தி படுத்த மட்டுமே பயன்படும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் நடித்த ’சர்கார்’ திரைப்படத்தில், இந்த 49P குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது' - சத்யபிரதா சாகு

ABOUT THE AUTHOR

...view details