வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (75). அவரது மனைவி மீனா (55). அவர்களுக்கு மூன்று மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் வீட்டில் ராஜேந்திரன் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 3.01.2015 அன்று இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (49) என்ற நபர், ராஜேந்திரன் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது வீட்டில் ராஜேந்திரன், மீனா இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மீனாவின் கழுத்திலிருந்த தாலி, கம்மல் ஆகியவற்றை யாருக்கும் தெரியாமல் எடுக்க முயன்றபோது, ராஜேந்திரன் சத்தம்கேட்டு எழுந்துள்ளார். இதையடுத்து அவர் தலைமீது சக்திவேல் கட்டையைக் கொண்டு ஓங்கி அடித்துள்ளார்.
இதற்கிடையில் அலறல் சத்தம் கேட்டு மீனாவும் கண் விழித்துள்ளார். உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் மீனாவின் தலையிலும் சக்திவேல் கட்டையைக் கொண்டு பலமாக அடித்ததில் இருவரும் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.