வேலூர்: வேலூர் தொரப்பாடியில் உள்ளது வேலூர் மத்திய சிறை.
இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட தண்டனைக் கைதிகள் மற்றும் விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், வெளி ஆட்கள் சிறைக்குள் சட்ட விரோதமாக சென்று வந்ததாகவும் தமிழ்நாடு சிறைத்துறையின் கூடுதல் தலைவர் (ADGP) அலுவலகத்திற்கு புகார்கள் வந்துள்ளன.
இது தொடர்பாக, வேலூர் மத்திய சிறையில் விசாரணை மேற்கொள்ள கோவை சிறைத்துறையின் துணைத் தலைவர் சண்முக சுந்தரத்திற்கு உத்தரவிடப்பட்டது.
70 பேரிடம் விசாரணை
இந்நிலையில், வேலூர் சரக சிறைத்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் சண்முகசுந்தரம் நேற்று முன்தினம் (ஜன. 24) முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினார். தொடர்ச்சியாக நேற்று (ஜன. 25) இரண்டாவது நாளாக சிறைக் காவலர்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது சிறைக்கு தொடர்பில்லாத வெளி ஆட்கள் யாரேனும் உள்ளே வந்தனரா? குடியிருப்பு ஒதுக்கீட்டில் அலுவலர்கள் தலையீடு மற்றும் பாரபட்சம் உள்ளதா? முறைகேடுகள் ஏதேனும் நடந்துள்ளதா? என்ற கோணத்தில் விசாரணையை நடத்தினார்.
பிறகு சிறைக்கு நேரடியாகச் சென்று அங்கு பணியில் இருந்த சிறைக் காவலர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வேலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் ருக்குமணி பிரியதர்ஷினி உள்ளிட்ட சிறையில் பணியாற்றும் 70 பேரிடமும் விசாரணை நடத்தினார்.
யாருடையது அந்த ரூ.3 லட்சம்?
ஆண்கள் சிறையின் அருகே உதவி ஜெயிலர்களின் அலுவலக அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையை வெளி நபர் ஒருவர் பயன்படுத்தியதாகப் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து சண்முகசுந்தரம் மற்றும் குழுவினர் அந்த அறையை சோதனையிட்டனர்.
சோதனையில் ரூபாய் 3 லட்சம் இருப்பது தெரியவந்தது. இந்தப் பணத்திற்கு யாரும் உரிமை கோராததால் பணத்தை கைப்பற்றி அதனை அரசு கருவூலத்தில் செலுத்த உத்தரவிட்டனர்.
இந்தப் பணம் பறிமுதல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறைத்துறை உயர் அலுவலர்கள் தொடர்ந்து கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் கைப்பற்றப்பட்ட அறையை பயன்படுத்தியது யார்? பணம் எப்படி அங்கு வந்தது, முறைகேடாக வசூலிக்கப்பட்டதா? என்பது குறித்து கூடுதல் விசாரணையை சிறைத்துறையினர் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பணிநேரத்தில் பாட்டுப்போட்டு லூட்டியடித்த தேனி கானாவிலக்கு நர்ஸுகள்