திருச்சி:திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரத்தைச் சேர்ந்தவர் குழந்தை (எ) நொண்டி குழந்தை, இவரது மகன் பெலிக்ஸ்ஜான்சன் (28) என்பவர் நேற்று மாலை (டிசம்பர் 12) ஆட்டோவில் மாவடிகுளம் அருகே சென்றபொழுது அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் பெலிக்ஸ்ஜான்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த திருவெறும்பூர் காவல் துறையினர், பெலிக்ஸ் ஜான்சன் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகள் குறித்த தடயங்களைச் சேகரிக்கும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன் திருச்சி பொன்மலைபட்டி கடைவீதியில் சின்ராசு என்பவரை வெட்டி கொலைசெய்த வழக்கில், சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி அலெக்ஸின் தம்பிதான் இந்த பெலிக்ஸ் ஜான்சன் என்பது தெரியவந்துள்ளது.