திருச்சி: திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 1970ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் இந்தப் பள்ளியில், தற்போதைய கல்வி ஆண்டில் 750-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றுவருகின்றனர்.
இந்தப் பள்ளியின் கட்டடங்கள் பல ஆண்டுகளாக முறையாகப் பராமரிக்கப்படாததால் தற்போது சிதிலமடைந்துள்ளன. ஊரடங்கு தளர்வுகளால் பள்ளி திறக்கப்பட்டு மாணவர்கள் வருகைபுரிந்து வரும் வேளையில் பள்ளியின் வகுப்பறையில், மின்விளக்கு, மின்விசிறி போன்ற அடிப்படை வசதி எதுவும் இல்லை.
பள்ளியின் ஜன்னல் கம்பிகளை உடைத்து வகுப்பறைக்குள் புகுந்து மின் கம்பிகள், மின்சாதன பொருள்கள் ஆகியவற்றைச் சிலர் திருடிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் தரப்பில் காவல் நிலையம், துறை சார்ந்த அலுவலர்களுக்குப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலர் பள்ளி இல்லாத நேரங்களில் குடிநீர் தொட்டியில் நிரப்பப்பட்ட நீரை சுயதேவைக்குப் பயன்படுத்தி வீணடித்துவருவதாகவும் கூறப்படுகிறது. பள்ளியின் கழிவறையும் சுகாதாரமற்ற முறையில் உள்ளது.