அகில இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் 136ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று(டிச.28) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுக்கோட்டை காந்தி சிலைக்கு திருச்சி எம்.பி., சு. திருநாவுக்கரசர் தலைமையில் ஏராளமான காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பதவியேற்பார். மக்களின் செல்வாக்கைப் பெற்ற அவர் இந்தியப் பிரதமராக பதவியேற்கும் காலம் விரைந்து வருகிறது. திருவள்ளுவருக்கு மதச் சாயம் பூசுவது கண்டனத்துக்குரியது மட்டுமல்ல. ஏற்றுக்கொள்ள முடியாததும் கூட.
அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை தேர்ந்தெடுத்துள்ளனர். அக்கூட்டணியில் சிறிய கட்சியாக உள்ள பாஜக அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இதற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மத்திய அரசைக் கண்டு அஞ்சுகின்றனர். செய்த தவறு காரணமாக மௌனமாக உள்ளனர்.
திமுக சார்பில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டங்களை தமிழ்நாடு அரசு தடுப்பது என்பது கண்டிக்கத்தக்கது. வேண்டுமென்றால் அதிமுக கிராம சபைக் கூட்டத்தை நடத்தட்டும்.
தமிழ்நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கின்ற ஊழல் ஆட்சியை அகற்றி திமுகக் கூட்டணி ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என இன்று நாங்கள் சபதம் எடுத்துள்ளோம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி எவ்வளவு இடங்களில் போட்டியிடும் என்று தற்போதைக்குக் கூற முடியாது. அதற்கு இன்னும் நாள் இருக்கிறது.
தமிழ்நாடு அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை பிரதான எதிர்க்கட்சியான திமுக ஆளுநரிடம் ஒப்படைத்துள்ளது. ஆளுநர் அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் ஊழல் நடந்ததாக இப்போது கூறுவது என்பது வீண் வாதம். இந்த பத்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் ஊழல் நடந்திருந்தால், அவர்கள் மீது ஏன் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
பொதுமக்களிடம் வரவேற்பு இல்லை என்பதற்காக தேஜஸ் ரயிலை நிறுத்துவதாக தற்போது ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் தற்போது கரோனா காலமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியே வராமல் உள்ளனர். அதனால்தான் கூட்டம் குறைவாக உள்ளது. எனவே, ரயிலைத் தொடர்ந்து இயக்கினால் தான் மக்கள் வெளியே வரத் தொடங்குவார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் எனது நீண்ட கால நண்பர். அவரது உடல்நிலை தான் எனக்கு மிகவும் முக்கியம். கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். தொடங்குவாரா அல்லது மாட்டாரா என்பது குறித்து அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்' என்றார்.
காங்கிரஸ் மூத்தத் தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர் கல்வித் தொலைக்காட்சி வழியாக ஒளிபரப்பப்படும் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், திருக்குறளை மேற்கோள் காட்டி, ஆசிரியர் விளக்கும் காட்சி ஒளிபரப்பானது. அதில், திருவள்ளுவரின் உடை காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் உணர்வாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :’பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும்’ - அமைச்சர் செங்கோட்டையன் உறுதி!