திருச்சியில் சுற்றுலா தளங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சுற்றுலா தளங்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளது. அதிலும் பொதுமக்கள், சிறுவர் சிறுமியர்கள், சுற்றுலாப்பயணிகள் அதிகம் விரும்பும் படகு சவாரி என்பது திருச்சிக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
ஏற்கனவே திருச்சி மெயின்கார்டு கேட் தெப்பக்குளத்தில் படகு சவாரி நடந்து வந்தது. தெப்பக்குளத்தில் முதலைகள் நடமாட்டம் இருந்ததால் படகு சவாரி ரத்து செய்யப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக முக்கொம்பு மேலணை பொழுதுபோக்கு பூங்காவில் செயற்கை நீர்நிலை அமைக்கப்பட்டு படகு சவாரி நடந்தது. சில நாட்களில் இதுவும் பராமரிப்பின்றி சிதலமடைந்து விட்டது.
இதனால் திருச்சியில் படகு சவாரி முற்றிலும் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. இந்நிலையில் திருச்சி பொன்மலைப்பட்டி அருகே கீழக்குறிச்சி கிராமத்தில் உள்ள மாவடி குளம் சமீபத்தில் ஆக்கிரமிப்புகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டு, பொதுப்பணித்துறை சார்பில் 1.92 கோடி ரூபாய் செலவில் குளத்தின் கரையில் பக்கவாட்டில் 210 மீட்டருக்கு சுவர்அமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.
இங்கு நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றிலிருந்து புது கட்டளை மேட்டு வாய்க்கால் வழியாக இந்த குளத்துக்கு தண்ணீர் வருகிறது. தற்போது குளத்தில் முழு கொள்ளளவில் 80 விழுக்காடு நீர் நிரம்பி, அதிகபட்சமாக குளத்தின் ஆழம் 4 அடி வரை உள்ளது.