திருச்சி: “தீரர்கோட்டமாம் திருச்சியிலே” , இப்படித்தான் திருச்சிக்கு வரும் அரசியல்வாதிகள் முழங்குவார்கள். முதன்முதலாக கருணாநிதி நின்றதும் இதே திருச்சியில்தான். மலர் மன்னன், கிளியநல்லூர் நடராஜன், பேரூர் தர்மலிங்கம், செல்வராஜ், ஷேக் முகமது வெல்லமண்டி சோமு, டாக்டர் ரொக்கையா இப்படி திமுகவில் இருந்து மதிமுக தொடங்கப்பட்ட நாள் முதல் நெஞ்சை நிமிர்த்தி வலம் வந்த மதிமுகவினர் சற்றே சோகமாகத்தான் தற்போது வலம் வருகிறார்கள்.
கடந்தமுறை நடந்த மாநகராட்சி தேர்தலில் நான்கு இடங்களில் வெற்றி பெற்றிருந்த மதிமுகவிற்கு, இம்முறை திமுக கூட்டணியில் இரண்டே இரண்டு இடங்களை மட்டும் வழங்கபட்டுள்ளது. அந்த இரண்டு வேட்பாளர்களில் ஒருவர் முப்பதாவது வார்டில் கோலோச்சிய முஸ்தபா, இம்முறை பெண்கள் வார்டாக மாறிவிட்டதால் தனது சகோதரியை களத்தில் இறக்கிவிட்டுள்ளார். மற்றொருவர் மாவட்ட துணைச்செயலாளர் அப்பீஸ் முத்துக்குமார் 5வது வார்டில் போட்டியிடுகிறார்.