ஆண்களைப்போல் இயல்பாக நிறைவடைவதில்லை பெண்களின் முடிவெட்டும் படலம். தங்களது முடிகளை வெட்டிக் கொள்ளக்கூட வீட்டின் உள்ள பெரியவர்களின் அனுமதி கேட்டுதான் முடியை வெட்டும் நிலை இருக்கிறது.
அதுமட்டுமின்றி, தங்களது முடிகளை வெட்டிக்கொள்ள தங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சாதாரண சலூன் கடைக்குக்கூட பெண்கள் செல்ல முடிவதில்லை. சென்றால் பொதுவெளியில் ஆயிரம் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். சலூன் கடைகளில் முடி வெட்டுதல், முகச்சவரம் செய்தல் ஆகியப் பணிகளில் ஆண்களே ஈடுபடுவதால், அது ஆண்களுக்கான இடமாக பொதுசமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சலூன் கடைகளில் பெண்கள் நுழைவதுகூட இழிவானதாகப் பார்க்கப்படுகிறது.
தங்கள் மகன்களுக்கு முடிவெட்ட சலூன் கடைக்கு அழைத்துவரும் பெண்கள்கூட, ஏதோ வரக்கூடாத இடத்துக்கு வந்துவிட்டதுபோல் நாற்காலியில் நிலை கொள்ளாமல் அமர்ந்திருப்பார்கள். அந்த நிலையைத் தகர்த்தெறியும் வண்ணம் ஓர் பெண் தன்னம்பிக்கையுடன் சலூன் கடை நடத்தி வருகிறார்.
திருச்சி சிந்தாமணி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரூபன் சண்முகநாதன் (40) - பெட்ரிஷியா மேரி (39) தம்பதியினர். இவர்களுக்கு ரஞ்சனி (19) என்கிற மகளும், ரஞ்சித் (17) என்ற மகனும் உள்ளனர். முடிதிருத்தும் கலைஞரான சண்முகநாதன், கடந்த 2014ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிடவே, அதிர்ச்சியில் உறைந்து போனார், பெட்ரிஷியா மேரி.
கணவரின் மரணத்துக்குப் பிறகு குழந்தைகளைப் படிக்க வைப்பதும், குடும்பத்தை நடத்துவதும் பெட்ரிஷியா மேரிக்கு சவாலாக மாறியது. பின்னர் கணவர் நிர்வகித்து வந்த சலூன் கடைக்கு சம்பளத்துக்கு ஆள் தேடியபோது, யாரும் முன்வராததால், தானே சலூன் கடையை நடத்த முன்வந்தார், பெட்ரிஷியா.
தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக முடி திருத்தும் தொழிலில் ஈடுபட்டுவரும் இவரிடம் ஆண்கள், குழந்தைகள் என அனைவரும் தற்போது முடிவெட்டுகின்றனர். சவரம் செய்துகொள்கின்றனர். இவரது தொழில் நேர்த்தியை கேள்விப்பட்டு ஏராளமானோர், தற்போது இவருக்கு வாடிக்கையாளராகவும் உள்ளனர். கணவனை இழந்த பெட்ரிஷியா மேரி, வறுமையிலும் தன்னம்பிக்கையுடன் சலூன் கடை தொடங்கி நடத்தி வருவது அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து பெட்ரிஷியா மேரி கூறுகையில், "நான் கடந்த பத்து ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகிறேன். எனது கணவர் விபத்தில் இறந்துவிட்டதால், நான் இந்த கடையை நிர்வகித்து வருகிறேன். என் கணவர் இறந்தவுடன் வேலைக்கு ஆட்கள் போட பெரிதும் முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் நீண்ட நாட்களாக கடையைப் பூட்டி போடும் நிலை உருவானது. இதனால் இந்தக் கடையை எடுத்து நானே நிர்வகித்து வருகிறேன்.