திருச்சிராப்பள்ளி:முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கண்டித்து வஉசி பேரவையினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டித்து திருச்சியில் வஉசி பேரவையினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட சில சமுதாயங்களை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் பொது பட்டியலில் இடம் பெற மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரை செய்தார்.
பல்வேறு சமுதாய சங்கங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த பரிந்துரையை தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இச்சூழலில், முதலமைச்சர் இந்த பரிந்துரை நடவடிக்கையை கண்டித்து திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை அருகே, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், அகில இந்திய வஉசி பேரவையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாளர் என்ற தங்களது சமுதாய பெயரை வேறு சமுதாயத்துக்கு சூட்டக்கூடாது என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அரியமங்கலம் காவல் துறையினர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுப்பட்ட வஉசி பேரவையினர் அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால் காவல் துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தனர். இந்த போராட்டம் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.