திருச்சி: திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். சோழ நாட்டு திருப்பதிகளில் முதன்மை தலமாகவும் திருவரங்கத்தை சொல்வர். திருவரங்கம் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ள திருவரங்கம் எனும் ஊர் ”ஸ்ரீரங்கம்” என்றும் அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் இது.ஏழு மதில்கள் சூழ, வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப்பெரிதான ராஜகோபுரம் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத ராஜகோபுரம், அகோபில மடத்தின் 44ஆவது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமானப்பணிகள் 1979-ல் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடனும் 236 அடி உயரத்தில் 1987ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
இது 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. திருவரங்கம் கோயிலைப் பாதுகாத்து, திருப்பணிகள் புரிய 1966-ல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) இக்கோயிலுக்குத் தொழில்நுட்ப உதவி அளிக்க முடிவு செய்தது. இந்நிறுவனம் பாட்ரிக் பால்க்னர், ஜார்ஜ் ரைட், ஜுனைன் அபோயர் ஆகிய நிபுணர்களின் சேவையை அளித்தது.