காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அத்திவரதர் கோயிலில் காவல் ஆய்வாளர் ஒருவரை ஒருமையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆட்சியரின் இந்த செயலை காவல்துறையினர் பல விதங்களில் கண்டித்து வருகின்றனர். ஓய்வுபெற்ற காவலர்கள் முதல் பணியில் இருக்கும் காவலர்கள் வரை ஆட்சியிருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால், இதுவரை ஆட்சியர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தோ, மன்னிப்பு கோரியோ எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை. இது காவல்துறையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வரும் சண்முகையா என்பவர் காஞ்சிபுரம் மாவட்ட பொது தகவல் அலுவலருக்கு சில கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுள்ளார்.
அவர் கேட்ட கேள்விகள்,
- கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றும் ஊழியர்களை பொது இடத்தில் வைத்து வாடா, போடா, வாயா, போயா என்று ஒருமையில் பேசுவதற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆடசியருக்கு எந்த சட்டத்தின் கீழ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது?
- வருவாய் துறை ஊழியர்களிடம் பொது இடத்தில் வைத்து இது போன்று வாடா, போடா, வாயா, போயா என்று ஒருமையில் பேச அவரால் முடியுமா? என்ற தகவலை அளிக்க வேண்டும் என்றும் குற்றிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சண்முகையா கூறுகையில், காவல்துறை ஆய்வாளரை ஒருமையில் பேசிவிட்டு, அதற்கு எதிர்ப்பு கிளம்பியும் ஆட்சியர் அசால்டாக இருக்கிறார். இதன் காரணமாகதான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அளித்துள்ளேன் என்றார்.
சண்முகையாவின் இந்த மனு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காவல் துறையினர் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.