திருச்சி:திருச்சி என்.ஐ.டி கல்லூரியின் நிறுவன நாள் விழா கல்லூரி அரங்கில் நேற்று (மார்ச் 6) நடந்தது. முன்னாள் மாணவர் கவுன்சில் தலைவர் சினேகிகலா வரவேற்றார்.
டீன் டாக்டர் ராமகல்யாண் அய்யஹரி மாணவர்களின் சாதனைகளை பட்டியலிட்டார். பேரிடர் காலத்தில் எதிர்கொண்ட சவால்களையும் நினைவு கூர்ந்தார்.
கல்லூரி இயக்குனர் மினி ஹாஜி தாமஸ், "இந்த கல்வி ஆண்டில் பல்கலைகழக அளவில் வினாடி-வினா போட்டிகளில் எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தேசிய அளவில் 9-வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு திருச்சி என்.ஐ.டி முன்னேறி இருக்கிறது. முதலிடத்தை பிடிப்பதே தனது குறிக்கோளாகும். மேலும் தேசிய ஆராய்ச்சி வளர்ச்சி கழகம் சார்பில் பிரத்தியேக கண்டுபிடிப்பு திருச்சி என்.ஐ.டி.யில் அமைக்கப்பட உள்ளது. பிரதமர் தேர்வு செய்துள்ள 25 ஆராய்ச்சிக் கல்வி நிறுவனங்களில் திருச்சி என்.ஐ.டி-யும் இடம்பெற்றுள்ளது" என்று புகழுரைத்தார்.
தலைவர் பாஸ்கர், "திருச்சி என்.ஐ.டி கல்லூரி தொழில்நுட்பக் கல்வியில் முன்னோடியாக இருக்கிறது. தேசியக் கல்விக் கொள்கையின் சவால்களை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
மத்திய வெளி விவகார அமைச்சக செயலர் விகாஸ் ஸ்வரூப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், "புதியன கண்டுபிடிப்பதில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாக இருக்க வேண்டும். இதற்கு தலைமை ஏற்கும் ஆய்வுக் குழுவின் தலைவருக்கு படைப்பாற்றல், ஆர்வம், பிறருடன் தொடர்பு கொள்ளும் திறன், பங்களிப்பு ஆகிய நான்கும் அவசியம் இருக்க வேண்டும். குழுவினரின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய வேண்டும். இதை நான் ஏற்கனவே தற்செயல் பயிற்சி என்ற நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன்.
இவை இருந்தால் மட்டுமே தொய்வின்றி ஆய்வு குழுவினரை ஆய்வுக்கு வழிநடத்த முடியும். நாம் கண்டுபிடிப்பில் புதிய சகாப்தம் படைக்க வேண்டும். திருச்சி என்.ஐ.டி கல்லூரிக்கு நிறைய சமூக சேவைகள் செய்த அனுபவம் உள்ளது. குறைந்த செலவில் தெருக்களை சுத்தம் செய்யும் வேக்கம் கிளீனர் எனும் தூசி உறிஞ்சி, விவசாயிகளுக்கான சோலார் குளிர்பதனக் கிடங்கு கண்டுபிடிப்புகள் பாராட்டத்தக்கவை.
பெண்களை தொழில்முனைவோராக்கும் பயிற்சி முகாம்கள், கிராமப்புற மாணவர்களுக்கு ஜேஇஇ நுழைவுத்தேர்வு பயிற்சி அளித்த தேசிய தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களை பாராட்டுகிறேன்" என்றார்.
விழா முடிவில் மாணவர் கமலேஷ் கண்ணா நன்றியுரை ஆற்றினார்.
இதையும் படிங்க:பிரதமர் மோடிக்கு ’எலும்புக்கூடு’ அனுப்பும் போராட்டம் ; விவசாயிகள் கைது!