டெல்லியில் கடந்த மாதம் 26ஆம் தேதி நடந்த குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக நாடு முழுவதுமிருந்து என்.சி.சி., என்.எஸ்.எஸ். மாணவர்கள் தேர்வுசெய்து அனுப்பிவைக்கப்பட்டனர்.
அந்த வகையில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி என்.சி.சி. வான் பிரிவில் மாணவி ரேஷ்மா, மாணவர் அபிஷேக், என்.சி.சி. ராணுவப் பிரிவில் மாணவர்கள் பாலாஜி, சாமுவேல், தீபன், என்.எஸ்.எஸ். பிரிவைச் சேர்ந்த மாணவி சமீனா பானு ஆகிய ஆறு பேர் இந்த அணிவகுப்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதில் வான் பிரிவு மாணவி ரேஷ்மா தேசிய அளவில் சிறந்த மாணவியாகத் தேர்வுசெய்யப்பட்டு, அவருக்கு பிரதமர் மோடி தங்கப்பதக்கமும், சான்றிதழும் வழங்கி பாராட்டினார். தேசிய அளவில் வெற்றிபெற்ற ரேஷ்மா மற்றும் குழுவினர் ஊர் திரும்பியபோது ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழாவும் நடைபெற்றது.
என்.சி.சி. என்பது வெறும் ட்ரில் மட்டுமே அல்ல என்றும் அதையும் மீறி நமது திறமைகளை வெளிக்கொண்டு வரக்கூடிய ஒரு தளம் என்றும் மாணவி ரேஷ்மா கூறினார். ஒற்றுமை, ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக்கொடுத்தது என்.சி.சி.தான் எனப் பெருமிதத்துடன் கூறும் அவர், மாணவ மாணவிகளை என்.சி.சி.யில் கட்டாயம் சேரவும் அழைப்புவிடுத்தார்.
ஒற்றுமை, ஒழுக்கம் ஆகியவற்றை என்சிசி கற்றுக்கொடுத்தது திருச்சியில் என்.சி.சி. பிரிவில் ராணுவம், வான் பிரிவில் இத்தகைய பதக்கம் பெறுவது இதுவே முதல் முறையாகும். ரேஷ்மாவுக்கு டைரக்டர் ஜெனரல் கமெண்டேஷன் என்ற விருது கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் திருச்சி என்.சி.சி. படைப்பிரிவு 23 விருதுகளைப் பெற்றுள்ளது என்றும், திருச்சி என்.சி.சி. வான்படைப் பிரிவுத் தலைமை கமாண்டன்ட் குணசேகரன் தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் திருச்சி என்சிசி படைப்பிரிவு 23 விருதுகளை பெற்றுள்ளது தகுதியுள்ள மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்புத் துறையில் உள்ள தரைப்படை, கப்பற்படை, வான்படை ஆகிய மூன்று பிரிவுகளிலும் வேலைவாய்ப்பு ஆண்டுக்கு 2 முறை வழங்கப்பட்டுவருகிறது. எனவே இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கமாண்டன்ட் குணசேகரன் கூறினார்.
இதையும் படிங்க: திருச்சியில் தேசிய கராத்தே போட்டி: கெத்து காட்டிய வீரர்கள்