திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகே அமைக்கப்பட்டுள்ள மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் எம்.பி. அலுவலக திறப்பு விழா இன்று நடந்தது. இந்த அலுவலகத்தை திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு திறந்துவைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருநாவுக்கரசர், "பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் பேனர்களை தடைசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
எனினும் இதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். பேனர்களை வைத்து கட்சி, அரசியல் தலைவர்களின் செல்வாக்கை எடை போட முடியாது. அரசியல்வாதிகள் பேனர்களில் வாழ்ந்தாலும் மக்களிடம் வாழந்துவிட முடியாது என்பதை கருத்தில் கொண்டு பேனர்களை தடைசெய்ய வேண்டும்.
ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் பலர் வேலையிழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே ஒரு கோடி பேர் வேலை இல்லாமல் உள்ளனர். மத்திய பாஜக அரசிடம் திட்டமிடல் இல்லாத காரணத்தால்தான் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் மீதான பழி வாங்கும் நடவடிக்கை, பொருளாதார நெருக்கடியை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன கூட்டங்கள் நடத்தப்படும்" என்றார்.
அடுத்தடுத்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறிய அவர், "உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சி, சின்னம் இல்லாத பஞ்சாயத்துகளில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் கட்சி போட்டியிட வேண்டும். அரசியல் கட்சி, சின்னம் உள்ள மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து போன்ற இடங்களில் திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். திமுக-காங்கிரஸ் கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும்.
திருச்சி எம்பி திருநாவுக்கரசர் பேட்டி இந்தியாவில் இந்தி பேசுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று அமித் ஷா கூறியது கண்டிக்கத்தக்கது. இது தவறான புள்ளி விவரம் ஆகும். இந்துக்கள் அதிகமாக இருப்பதால் இந்தியாவை இந்து நாடு என்று அறிவிக்க முடியாது. ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை நிலைநாட்ட பாஜக அரசு நினைக்கிறது. மக்கள் விருப்பத்தை மீறி எதுவும் திணிக்க முடியாது. அவ்வாறு செய்தால் தேவையற்ற போராட்டங்கள், வன்முறைகளுக்கு வழிவகுக்கும்.
ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தேவையற்றது. ஏற்கனவே பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உள்ளது. இது போதுமானதாகும். தேர்வுமுறை மூலம் குழந்தைகளின் எதிர்காலத்தை பாழாக்கக் கூடாது. இதன்மூலம் மேற்படிப்பு பாதிக்கும். ஒழுங்குபடுத்துவதற்கு தேர்வுமுறை தேவைதான். அதற்காக குழந்தைகளின் எதிர்காலத்தை முடக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.