திருச்சி: முசிறி அருகே நெய்வேலி கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். முசிறி தாலுகாவில் நெய்வேலி கிராமம் உள்ளது. அங்குள்ள ஏரி அண்மையில் பெய்த மழையினால் நிரம்பியிருந்தது. இந்நிலையில் கிராம மக்கள் ஒன்றுகூடி மீன் திருவிழா நடத்தத் திட்டமிட்டனர். அதன்படி, இன்று (ஜூன்16) ஏரியில் பொதுமக்கள் ஒன்று கூடினர்.
அப்போது பொதுமக்களுக்கு மீன் பிடிப்பதற்கு ஊராட்சி தலைவர் சைகை காட்ட, கரையில் நின்றிருந்த பொதுமக்கள் ஏரிக்குள் குதித்தனர். தங்களிடமிருந்த மீன்பிடி வலை, கூடைகளை பயன்படுத்தி மீன்களைப் பிடித்தனர். சிறுவர்-சிறுமிகள் கரையோரத்தில் துள்ளிக் குதித்த சிறு மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.