தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்பாற்றலை வெளிக்கொணர்ந்து ஊக்குவிக்கும் வகையில், இந்திய அறிவியல் இயக்கத்துடன் இணைந்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியை திருச்சி இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் நேற்று(மார்ச் 31) நடைபெற்றது.
இதனை மாவட்ட ஆட்சியர் சிவராசு குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து, மாணவ, மாணவியர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு அவர்களை பாராட்டினார். இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் சொட்டுநீர் பாசன வழிமுறைகள், ஆழ்துறை கிணறுகளை உணர்த்தும் கருவி, கிளீனிங் ரோபா உள்ளிட்ட 138 அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "பள்ளியில் படித்ததை செய்முறையாக செய்யும்போது மாணவர்களுக்கு எளிதில் புரியும், பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைவிட கவுன்சிலிங் அளிப்பதே சரியானது. திருச்சி மாவட்டத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை. அவ்வாறு நடந்தால் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் கவுன்சிலிங்கும் வழங்கப்படும்.
மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைவிட கவுன்சிலிங் எடுப்பதுதான் சரியானது பள்ளிகளுக்கு பேருந்து அல்லது பெற்றோருடன்தான் இருசக்கர வாகனத்தில் வரவேண்டும். மாறாக 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வருவதை ஆர்டிஓ கொண்டு கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணியும்பட்சத்தில் நான்காவது அலையை தடுக்கலாம்" என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'விரைவில் சுற்றுலாத்தலங்களில் நீர் விளையாட்டுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் தகவல்!'