திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் திருமண மண்டபத்தில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. "பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!" என்ற மையக்கருத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய அவர், "நகர்ப்புறங்களில் உள்ள பெண்கள் பலர் அரசு பொதுத் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்று பல்வேறு பதவிகளில் உள்ளனர். சுமார் 50 விழுக்காடு பெண்கள் இவ்வாறு தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் கிராமப்புறங்களில் உள்ள பெண்களின் மேம்பாடும் வளர்ச்சியும் குறைவாகவே உள்ளது. சாதி, மதம் போன்ற பிற்போக்குத்தனமான காரணங்களால் இந்த நிலை கிராமப்புறங்களில் இன்னும் நீடிக்கிறது. அதனால் நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் அரசின் நலத்திட்ட உதவிகள், பெண்களுக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் பெண்கள் முன்னேற்றத்தில் சிறந்து விளங்குகிறது. அரசின் திட்டங்கள் ஏட்டளவில் மட்டுமில்லாமல் பெண்களை நேரடியாக சென்றடையும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும்" என்றார்.