தமிழ்நாடு கோழி வியாபாரிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்டா மற்றும் மலைக்கோட்டை கோழி மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் திருச்சியில் இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது. இதில், சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான கோழி வியாபாரிகள், கோழி உற்பத்தி நிறுவனங்கள், பண்ணையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்துக்கு டெல்டா கோழி மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். செயலாளர் பாரத் ஜீவா, மலைக்கோட்டை கோழி வியாபாரிகள் சங்க தலைவர் ரம்யா கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு கோழி வியாபாரிகளின் ஆலோசனைக் கூட்டம் இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டெல்டா வியாபாரிகள் சங்க தலைவர் துரைராஜ் கூறுகையில், பிராய்லர் கோழிகளின் தரத்தை மேலும் உயர்த்துவது குறித்து உற்பத்தி நிறுவனங்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தரமான கோழிகளையும், சுகாதாரமான கோழிகளையும் வழங்க வேண்டும் என நிறுவனத்திடம் வலியுறுத்தியுள்ளோம்.
கோழி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும், கடைகளின் அமைப்பை மாற்ற வேண்டும் என்ற கருத்துக்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. இந்த கோரிக்கையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக நிறுவனத்தினர் உறுதி அளித்தனர். கோழி நிறுவனத்துக்கும் வியாபாரிகளுக்கும் இடையே பண்ணையாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு இடையே உள்ள பிரச்னையையும் தீர்க்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.