பாஜக மாநிலத் தலைவர் முருகன் திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தேனி, மதுரை, திருச்செந்தூரில் வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டிருந்தோம். புயல் காரணமாக வேல் யாத்திரை முற்றிலும் ரத்துசெய்யப்படுகிறது.
வரும் டிச. 4ஆம் தேதி ஒரேநாளில் அறுபடை வீடுகளுக்கும் சென்று தரிசித்துவிட்டு, 5ஆம் தேதி திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவுசெய்யப்படும்.
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து அதிமுக உறுதிசெய்துள்ளது. கூட்டணி குறித்து பாஜகவின் தேசிய தலைமை அறிவிக்கும். எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து ஆலோசனைக்குப் பின்னர் அறிவிக்கப்படும். அமித் ஷாவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையில் பாஜகவிற்கு 40 தொகுதிகள் கேட்கப்பட்டது என்பது ஒரு யூகம்தான்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலைக்கு ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்” எனத் தெரிவித்தார்.
பேட்டியின்போது மாநில இணைப்பொருளாளர் சிவசுப்பிரமணியன், மாநிலத் துணைத் தலைவர் நரேந்திரன், மாநிலப் பொதுச்செயலாளர் சீனிவாசன், மாவட்டத் தலைவர் ராஜேஷ் குமார், மண்டல ஒருங்கிணைப்பாளர் அரவிந்த், புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட முன்னாள்தலைவர் தங்கராஜையன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.