திருச்சிராப்பள்ளி: தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், சத்திரம் பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் கலந்து கொண்டார்.
முன்னதாக ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலம். மாணவர்களின் கல்வி என்பது நாட்டின் வளர்ச்சி. எனவே இல்லம் தேடி கல்வி திட்டத்திற்க்கு அரசியல் சாயம் பூச தேவையில்லை.
தமிழ்நாடு தினம் குறித்து தமிழ் உணர்வாளர்கள், தமிழ் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் ஒத்த கருத்து இல்லாமல் பல்வேறு கருத்துகளை கூறி வருகின்றனர். எனவே, தமிழ்நாடு அரசு அனைவரின் கருத்தை கேட்டு முடிவு எடுக்க வேண்டும்.
பண்டிகை காலமாக இருப்பதாலும், கரோனா, டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவல் இருப்பதாலும், டாஸ்மாக் பார் திறப்பதை அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். பார்கள் திறப்பது அரசின் லாபத்திற்கு தானே தவிர, மக்களின் நல்வாழ்வுக்கு இல்லை.
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அது தொடர வேண்டும் என்பது தமாகாவின் நிலைபாடு. இந்தியன் ஆயில் நிறுவனம், சென்னை பெட்ரோகெமிக்கல் இணைந்து 31 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 90 லட்சம் டன் சுத்திகரிப்பு திறன் நிலையத்தை நிறுவி வருகிறது.
தமிழ்நாடு அரசு சிறு, குறு தொழில் முதலீடு சார்பில் ஒப்பந்த புள்ளிகளை கோரியிருப்பதை மீண்டும் திரும்ப பெற வேண்டும். அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். அதனால் அதிமுகவின் உள்விவரங்கள் குறித்து பேசுவது சரியாக இருக்காது" என்றார்.
இதையும் படிங்க:குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!