திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று (ஜூலை 13) ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா சிறப்பு வார்டில் 600 படுக்கைகள் உள்ளன.
தற்போது இந்த எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் இவை அதிகரிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 16 லட்சத்து 54 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 45,000 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து உயிர் காக்கும் மருந்துகளும் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, அலோபதி உள்ளிட்ட அனைத்து மருத்துவ முறைகளையும் இணைத்து ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. கரோனா தொற்று குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கை தேவை. இந்திய அளவில் பிளாஸ்மா பரிசோதனை செய்வதற்கு 44 மையங்கள் அமைக்க ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளது. மண்டல அளவில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நாளொன்றுக்கு நான்கு முதல் 60 லிட்டர் வரையிலான ஆக்சிஜன் தேவைப்படுகிறது. எனவே தேவையை கருத்தில் கொண்டு தற்போது அதிக திறன் கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.
கரோனாவிற்கு உலக அளவில் பல்வேறு நாடுகளில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆனாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. மருத்துவ குழுவின் ஆலோசனைப்படியே தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் பலன் கிடைத்துவருகிறது” என்றார்.