திருச்சியை அடுத்த அரியமங்கலத்தை சேர்ந்த கோமதி, திருச்சி ஈவேரா கல்லூரி தேர்வு நெறியாளர் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். தனது பணி முடிந்து மாலையில் வீடு திரும்பும் கோமதி தினமும், தனது பகுதியில் உள்ள விளிம்பு நிலை மாணவர்களுக்காக மாதம் 1 ரூபாய் கட்டணத்தில் டியூஷன் நடத்தி வருகிறார்.
இவரிடம் எல்.கே.ஜி முதல் ப்ளஸ் 2 வரையிலான 90க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஏழை மாணவர்களின் கல்வியில் எந்தவித தடையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, இந்த டியூஷன் சென்டரை நடத்தி வருவதாக தெரிவிக்கிறார் கோமதி. தானும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்ததால், ஏழை மாணவர்களின் கஷ்டம் தனக்கு நன்றாகவே தெரியும் என்கிற கோமதியிடம், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இதுவரை பயின்றுள்ளனர்.
அதிகளவில் பணம் கொடுத்து வெளியில் டியூஷன் படிக்க முடியாத நிலையில், கோமதி அக்காவின் இந்த டியூஷனால் தங்களால் எளிதாக கல்வி கற்க முடிவதாகவும், தங்கள் பகுதியில் உள்ள அனைத்து ஏழை மாணவர்களும் கோமதி அக்காவிடமே படித்து வருவதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.
ஒரு ரூபாய் டியூஷன்! திருச்சியில் ஒரு ரியல் 'மாஸ்டர்' அதிகளவிலான மாணவர்கள் பயின்று வருவதால் இங்கு போதிய இடவசதி இன்றி சிரமப்படுகின்றனர் மாணவர்களும் கோமதியும். மழைக்காலங்களில் இது இன்னும் மோசமாகிவிடும் என்கின்றனர் அவர்கள். எனவே அரசு தங்களுக்கு டியூஷன் நடத்த நிரந்தர இடம் ஒன்றை ஒதுக்கிக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். இலவசமாக ஒன்றை செய்யும்பொது அதன் மதிப்பை உணர முடியாது என்பதாலும், அதேவேளை அதுவே சுமையாகிவிடக் கூடாது என்பதாலும், மாதம் 1 ரூபாய் மட்டும் கட்டணம் பெறுவதாக தெரிவிக்கிறார் இந்த எளியோரின் ஆசிரியை.
இதையும் படிங்க: உழக்குடியில் அகழாய்வு? தொல்லியல் துறை ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவு!