தை அமாவாசையை முன்னிட்டு, இந்தாண்டு இன்று (ஜனவரி 31) ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபம், காவிரி படித்துறையில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
மாதந்தோறும் அமாவாசை வந்தாலும், ஆடி மாதம் வரும் அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை, தை மாதம் வரும் தை அமாவாசை ஆகியவை சிறப்பு வாய்ந்த அமாவாசை நாள்களாகக் கருதப்படுகின்றன.
அன்றைய நாளில் முக்கிய ஆறுகள், நீர்நிலைகள் போன்ற பகுதிகளில் திரளும் பொதுமக்கள், புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்கள் நினைவாக திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
முன்னோர்களுக்குத் தர்ப்பணம்
இதன்மூலம், தங்களது முன்னோர்களின் ஆசி, தங்களுக்கும், தங்களது சந்ததியினருக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி, இன்று தை அமாவாசை நாளையொட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, கருட மண்டபம், ஓடத்துறை படித்துறை உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
அப்போது அவர்கள் புனித நீராடி, பின் காலஞ்சென்ற தங்களது பெற்றோர், முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர். இதனையொட்டி, ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் பாரதிதாசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
காவல் துறை பாதுகாப்பு