திருச்சி: வளநாடு அருகே சிங்கி வயலைச் சேர்ந்தவர் ஆதினமிளகி (48). இவருக்கும் பக்கத்து வீட்டுக்காரரான திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த பூசாரி பாலமுருகன் என்பவருக்கும் நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது.
கிணற்றில் குளித்தற்காக கொடூரக் கொலை
இந்நிலையில், நேற்று ஜனவரி 10 ஆம் தேதி, காலை பூசாரி பாலமுருகன் தனது ஐந்து வயது மகன் கருப்பையாவுடன் ஆதினமிளகியின் கிணற்றில் குளித்து விட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, பாலமுருகனை வழிமறித்த ஆதினமிளகி எனக்கும் உனக்கும் பிரச்சனை இருக்கும் நிலையில் என்னுடைய கிணற்றில் ஏன், குளித்தாய்? எனக் கேட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கையிலிருந்த அரிவாளால் பாலமுருகனின் நெஞ்சு பகுதியில் ஆதினமிளகி பலமாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காவல்துறை விசாரணை
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வளநாடு காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வளநாடு காவல்துறையினர் தலைமறைவான ஆதினமிளகியை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருச்சி, ஈரோட்டில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி