உலகப் புகழ்பெற்ற தஞ்சை சரஸ்வதி நூலகத்தின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று நடந்தது. இதில் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில், உலகப் பொதுமறையான திருக்குறளை தாமிரப் பட்டயத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு சரஸ்வதி மஹால் நூற்றாண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்டார். மேலும் இவ்விழாவில் சரஸ்வதி மஹால் நூற்றாண்டு நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
இதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் சரஸ்வதி மஹால் நூலகம், ஆய்வு மையத்தை பார்வையிட்டு ஓலைச் சுவடிகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் தஞ்சாவூர் மத்திய நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பு, தமிழ் இசை நடனம் கலை குறித்த சிறப்பு நூலகத்தினை செங்கோட்டையன் திறந்துவைத்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் பேசியதாவது:
தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் உலகப்புகழ்பெற்ற நூலகம் ஆகும். இங்கு ஏராளமான ஓலைச்சுவடிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய் பராமரிப்பிற்கு நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தஞ்சையில் கிராமப்புற இளைஞர்களுக்கென்று ஒரு நூலகமும் கோவையிலேயே தொழிற்சாலை தொடர்பான நூலகமும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் இருமொழிக் கல்வியைத் தவிர வேறு மொழி திணிக்கப்படாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாகஇருக்கிறது.
அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நமக்கு வரவேண்டிய ரூ.370 கோடி நிதியை இதுவரை வழங்கவில்லை.
எவ்வளவு நிதி வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி சரஸ்வதி மஹால் நூற்றாண்டு விழா நிகழ்வில், பட்டுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சேகர், சட்டப்பேரவை முன்னாள்உறுப்பினர் ராமநாதன் நூலகத் துறை இயக்குநர் சாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துறை திருஞானம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், அரசு அலுவலர்கள் மாணவ மாணவிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: விண்வெளி விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்த அமைச்சர் செங்கோட்டையன்