திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பழங்குடியினர்கள் காலியிடங்களுக்கு 300 பேர் தேர்வானதாகவும், அந்த வாய்ப்பில் தமிழர்கள் யாருக்கும் வாய்ப்பு தரப்படாமல் அனைத்து வேலை வாய்ப்புகளும் வடநாட்டவருக்கே கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. பட்டப்படிப்புகளை முடித்துவிட்டு வேலைவாய்ப்புகளுக்காக பல லட்சம் இளைஞர்கள் காத்திருக்கும் நிலையில் அனைத்து காலியிடங்களும் வடமாநிலத்தவர்களை கொண்டு நிரப்பப்பட்ட செய்தி சமூக வலைதளங்களில் இளைஞர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இச்சூழலில், தமிழ் தேசிய பேரியக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி இணைந்து “இன ஒதுக்கலை எதிர்த்து தமிழர் மறியல்; தமிழருக்கு மறுப்பு; வெளியாரை வெளியேற்று” என்ற கோரிக்கைகளுடன் திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து கரோனா காலம் என்பதால் தமிழ் தேசிய பேரியக்க உறுப்பினர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினருக்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு பணிகள் தமிழர்களுக்கே வழங்கப்பட வேண்டும், திருச்சி பொன்மலை பணிமனையில் நியமிக்கப்பட்ட 300 பேருக்கான அனுமதியை ரத்து செய்து அவ்விடத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களை அமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சமூக வலைதளங்களில் #TamilnaduJobsForTamils ’#தமிழகவேலைதமிழருக்கே’ என்ற ஹேஷ்டேக் பரப்புரையில் ஈடுபடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும், அவரவர் தம் வீடுகளுக்கு முன்னால் கொடியேந்தி அறவழியில் போராட்டம் நடத்துமாறும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேற்கண்ட காரணங்களை வலியுறுத்தி பிரபல வலைதளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக்கில் #தமிழகவேலைதமிழருக்கே #TamilnaduJobsForTamils என்ற இரண்டு ஹேஷ்டேக்குகளில் இது தொடர்பான பதிவுகள் பதியப்பட்டன. தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர்களும் தங்கள் வீடுகளில் கொடியும், பதாகைகளையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வேளையில் இரண்டு ஹேஷ்டேக்குகளும் இந்திய அளவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்தது. மாலையில் ட்ரெண்டிங்கில் இருந்த இரண்டு ஹேஷ்டேக்குகளும் சென்றதால் சமூகவலைதளவாசிகள் இது குறித்து பதிவிட்டுவருகின்றனர்.