திருச்சி:பாரதிய ஜனதா கட்சி இடம் பெறாத கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும் என தமிழ்நாடு சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தலைவர் ரவிச்சந்திரன் திருச்சியில் இன்று (டிச.28) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தமிழ்நாடு சிவசேனா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம், " தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். யாருடன் கூட்டணி என்பதை தேசிய தலைமை முடிவு செய்து அறிவிக்கும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், 51 தொகுதிகளில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றோம்.
அதேபோல், கூட்டணி அமையவில்லை என்றால், 50 முதல் 60 தொகுதிகளில் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், பாஜக இல்லாத கூட்டணிக்கு தமிழ்நாடு சிவசேனா ஆதரவு அளிக்கும்.
சிவசேனா கட்சி வெற்றி பெற்றால் திருச்சி, மதுரை, கோவை ஆகிய மூன்று நகரங்கள் தலைநகரங்களாக உருவாக்கப்படும். இந்து மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை உதவித்தொகை வழங்கப்படும். கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.
மாவட்டந் தோறும் விவசாய கல்லூரி அமைக்கப்படும். திருக்குலத்தார், முக்குலத்தோர், வன்னியர், வெள்ளாளர், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும்.
50 லட்சம் பேருக்கு ஆண்டு தோறும் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இந்து மத தெய்வங்களை இழிவு படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும்" என்றார்.
அந்த சந்திப்பின் போது மாநில செயலாளர் பிச்சைமுத்து கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க:பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம்! பட்டியல் வெளியிட்ட கமல்!