திருச்சி:தமிழ்நாட்டில் லாட்டரிச் சீட்டுத் திட்டம் 1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு என்ற முழக்கத்தோடு செய்தி மற்றும் விளம்பரத் தொடர்புத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த லாட்டரிச் சீட்டுத் திட்டத்துக்கு ஆரம்பத்தில் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு இருந்தாலும் காலப்போக்கில் கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது.
லாட்டரிச் சீட்டுக்கு அடிமையான ஏழை மக்கள் பலர் தங்கள் அன்றாட வருமானத்தையும், வாழ்நாள் சேமிப்பையும் இழப்பதாகவும் இதனால் பலர் தற்கொலை செய்துகொள்வதாகவும் நாலாபுறமும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப்பின் ஜெயலலிதா அரசால் லாட்டரிச் சீட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது.
ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரிச்சீட்டு விற்பனை இன்றும் கொடிகட்டிப் பறந்து வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கேரள பார்டருக்குச்சென்று லாட்டரிச் சீட்டுக்களை மொத்தமாக வாங்கி வந்து விற்கத் தொடங்கினர். தமிழ்நாடு அரசு தன்னுடைய இரும்புக்கரத்தைக் கொண்டு கடுமையாக்கியதால் லாட்டரிச் சீட்டு விற்பனை சற்றே தணிந்து இருந்தது.
பின்னாளில் சில ஏஜெண்டுகள் வேறுவிதமாக சிந்திக்கத் தொடங்க, கேரளாவில் தினமும் லாட்டரிச் சீட்டு குலுக்கல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கேரள தொலைக்காட்சி ஒன்றில் லாட்டரிச் சீட்டின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டும் கணக்கில் கொண்டு ஏமாற்ற ஆரம்பித்தார்கள், தமிழ்நாட்டு மக்களை. உதாரணமாக 1, 2, 3, 4 என்ற எண்களுக்கு நீங்கள் 150 ரூபாய் பணம் கட்டி, அந்த நான்கு இலக்கங்களும் சரியாக இருந்தால் 1 லட்சம் ரூபாய், கடைசி மூன்று இலக்கங்கள் ஒத்துப்போனால் 25,000 ரூபாய், கடைசி இரண்டு இலக்கங்கள் ஒத்துப்போனால் 1,000 ரூபாய், ஒரே ஒரு இலக்கம் மட்டும் ஒத்துப்போனால் 100 ரூபாய் கிடைக்கும் என அறிவித்தார்கள்.