திருச்சி: சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், விடுதலைப் போரில் தமிழ்நாட்டின் பங்களிப்பைப் போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு இரண்டு அலங்கார ஊர்திகள் பங்கேற்றன. இவை தமிழ்நாடு முழுவதும் சுற்றிவரும் என தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று(பிப்.6) திருச்சி சத்திரம் பேருந்து நிலையப்பகுதியில் காமராஜர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தலுக்காக வந்தது. இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு மலர் தூவி பார்வையிட்டார்.
இந்த இரண்டு அலங்கார ஊர்திகள் ஒன்றில் மகாகவி பாரதியார், செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரனார், தியாகி சுப்பிரமணிய சிவா, தியாகி சேலம் விஜயராகவாச்சாரியார் ஆகிய தலைவர்களின் திருவுருவச்சிலைகள் இருந்தன.
மற்றொரு அலங்கார ஊர்தியில், மூதறிஞர் ராஜாஜி, கர்மவீரர் காமராஜர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், சமூக சீர்திருத்தச் செயற்பாட்டாளர் ரெட்டைமலை சீனிவாசன், வீரன் வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, கொடிகாத்த திருப்பூர் குமரன், தியாகி வ.வே.சு.ஐயர் திருவுருவச்சிலைகள் இருந்தன.