கத்தார் நாட்டின் தோஹா நகரில் 23ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்துவருகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, ஈரான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் கலந்து கொண்டுள்ளன.
இதில் நேற்று பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயம் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 02.70 வினாடியில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
யார் இந்த கோமதி?
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோமதி. இவரது தந்தை மாரிமுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்கோளாறு காரணமாக இறந்துவிட்டார். கோமதி முழுக்க முழுக்க அரசுப் பள்ளியிலேயே படித்து, வீட்டிலேயே பயிற்சி செய்துள்ளார். பின் கல்லூரியிலும் கடுமையாக பயிற்சி செய்துள்ளார்.
வருமானவரித் துறையில் கால்பதித்த கோமதி
விளையாட்டு இடஒதுக்கீட்டில் இவருக்கு ரயில்வே மட்டும் வருமானவரித் துறையில் வேலை கிடைத்துள்ளது. இதில் வருமான வரித்துறையை தேர்ந்தெடுத்து கடந்த ஒரு வருடமாக பணியாற்றிவருகிறார்.
வறுமையையும் மீறி கோடிக்கணக்கானோரின் இதயங்களை வென்ற கோமதி
ஆசியப் போட்டியில் தங்கம் வென்றது குறித்து அவரது தாய் ராஜம்மாள் பேசுகையில், 'எனது கணவர் மிகவும் கஷ்டப்பட்டு பிள்ளைகளை வளர்த்தார். யாருமே சரியாக படிக்கவில்லை. கோமதி மட்டுமே உயர்கல்வி வரை பயின்றார். வறுமை காரணமாக எங்களது எதிர்ப்பையும் மீறி அவர் கல்வி பயின்றார். சிறுவயது முதலே அவருக்கு விளையாட்டில் ஆர்வம். வீடு முழுக்க அவரது பதக்கங்கள்தான் நிறைந்திருக்கும். தற்போது அவர் ஆசியப் போட்டியில் தங்கம் வென்று இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது' என்று ஆனந்தக் கண்ணீர் வழிய தெரிவித்தார்.
தங்கம் வென்ற தமிழக வீராங்கனை தாய் நெகிழ்ச்சி!