போதிய மழையின்மை, காவிரியில் நீர் இல்லாதது, ஹைட்ரோகார்பன் போன்ற பல்வேறு காரணங்களால் காவிரி டெல்டாவில் அண்மைக்காலமாக, நெல் சாகுபடியில் போதிய வருவாய் இல்லாமல் விவசாயிகள் அல்லல்பட்டுவருகின்றனர். எனவே, உழவர்கள் மாற்றுச்சாகுபடித் திட்டத்தை கையில் எடுக்க அரசும், வேளாண் ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்திவந்தாலும், அதனை ஒரு சில விவசாயிகள் மட்டுமே கடைப்பிடித்து வெற்றியாளர்களாகவும், பிறருக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்துவருகிறார்கள். அந்த வகையில் திருவாரூரை அடுத்த அரசவனங்காடு கிராமத்தில் 10 ஏக்கர் விவசாய நிலத்தில், ஆண்டுக்கு 20 லட்சம் வருமானம் ஈட்டிவருகிறார் கணேஷ் கமலக்கண்ணன் என்ற விவசாயி.
இளங்களை வணிகவியல் (பி.காம்.) பட்டதாரியான இவர், 2003ஆம் ஆண்டு தனது நிலத்தின் ஒரு பகுதியான சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் பண்ணைக்குட்டை அமைத்து அதன் கரையோரங்களில் தென்னங்கன்றுகளை நட்டார். இந்தத் தொடக்கம் அவருக்குப் பல்வேறு சிந்தனையைத் தூண்டி தற்போது அந்தப் பண்ணைக்குட்டை ஜந்து ஏக்கராக விரிவடைந்துள்ளது. அதற்கேற்ப தென்னை மரங்களும் நூறாக அதிகரித்துவிட்டன.