திருச்சி:மணப்பாறையில் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் ரமேஷின் தந்தை ஜெயராமகிருஷ்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கவந்த சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், "தமிழ்நாட்டில் பொதுவாக ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கலாம் என்ற கருத்தில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அந்த ஏழு பேருக்கு மட்டும் தனிச் சலுகை, தனிப் பரிந்துரை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தேவையில்லை நீட்
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையில்லை என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலேயே கூறினோம். என்னைப் பொறுத்தவரை கடந்த ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளித்த ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது.
நீட் தேர்வை மத்திய அரசு ரத்துசெய்யுமா, அதை மருத்துவ கவுன்சில் ஏற்றுக்கொள்ளுமா, என்பது தெரியாது.
பொதுத்தேர்வு வேண்டும்
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புத் தேர்வை ரத்துசெய்துள்ள நிலையில், மதிப்பெண் எதன் அடிப்படையில் அளிக்கப் போகிறார்கள், இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப் போகிறார்கள், என்ற தெளிவு தற்போது இல்லை. எனது தனிப்பட்ட கருத்து தேர்வை ரத்துசெய்திருக்கக் கூடாது.
இதில் எதிர்காலத்தில் பல குழப்பங்கள் வரும்,தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிலேயே இந்த இரண்டு ஆண்டுகள் கல்வித் துறையைப் பொறுத்தவரை மிகவும் பின்தங்கி இருப்பார்கள். இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு ஒரே ஒரு காரணம் நரேந்திரமோடி மட்டும்தான்.
மோடியே காரணம்
மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசியை உற்பத்தி, இறக்குமதி ஆகியவற்றை அவர் செய்யவில்லை. இங்கு உற்பத்திசெய்யப்பட்டதையும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தார். இந்த முழுக் குழப்பத்திற்கு காரணம் நரேந்திர மோடிதான். அவர் யார் ஆலோசனையும் கேட்பது கிடையாது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: மாநில வளர்ச்சி மேம்பாட்டு குழு உறுப்பினர்களின் முழு விவரம்