திருச்சி: திமுக முன்னாள் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவின் 69-வது பிறந்தநாள் மே மாதம் 15-ம் தேதி என்றாலும் பெரும்பாலும் கொண்டாட மாட்டார். ஆனால் கடந்த மாதம் நடந்த விழாவில் கறிவிருந்துடன் சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாட்டப்பட்டது. நாடாளுமன்றத்தில் திமுகவின் முகமாக அறியப்படுபவர் திருச்சி சிவா.
திமுகவின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான இவர், சிறந்த எழுத்தாளரும், இலக்கியவாதியுமாக திகழ்கிறார். தொடர்ச்சியாக 5 முறை மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தேசிய அளவில் கட்சிகளை தாண்டி, பிரதமர் உள்ளிட்ட அனைவரிடமும் நல்ல நட்புறவை பேணி வருபவர். திமுகவில், கல்லூரி பருவத்தில் இணைந்த இவர், எமர்ஜென்சி பிரகடனப்படுத்தப்பட்ட, 1976-ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்றவர். அதனால், அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியின் நன்மதிப்பை பெற்றார்.
அதைத் தொடர்ந்து திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் என அக்கட்சியில் தொடர்ச்சியாக பல்வேறு பதவிகளைப் பெற்றார். தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மிக முக்கிய அடையாளமாக விளங்கியது, திமுக இளைஞரணி. அந்த திமுக இளைஞரணியை உருவாக்கிய ஐவரில் ஒருவர் திருச்சி சிவா. அந்த வகையில், முதலமைச்சர் ஸ்டாலினின் நெஞ்சுக்கு நெருக்கமானவராக இருக்கிறார்.
தற்போது, திமுக கொள்கை பரப்பு செயலாளராகவும், திமுக மாநிலங்களவை குழுத் தலைவராகவும் இருக்கிறார். கடந்த, 25 ஆண்டுகளாக டெல்லி அரசியலை மையப்படுத்தியே இவரது செயல்பாடுகள் இருந்தன. டெல்லியில் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து உரையாடுவது, மாநிலங்களவையில் திமுக தரப்பு வாதங்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பது, கட்சித் தலைமை அறிவுறுத்தும் வேலைகளை டெல்லியில் கனகச்சிதமாக செய்து முடிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் திருச்சி சிவாவின் மகன் பாஜகவிற்கு சென்ற நிலையில் உள்ளூர் அரசியலில் முன்னெப்போதும் பெரிதாக ஈடுபாடு காட்டாதவர் தனது, 69-வது பிறந்தநாள் கொண்டாட்டம் மூலம், சில அதிரடி அரசியல் சமிக்கைகளை வெளிக்காட்டி இருக்கிறார். திருச்சியில் நடந்த திருச்சி சிவாவின் பிறந்தநாள் விழா வழக்கத்துக்கு மாறாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவரது வீடு அமைந்துள்ள கன்டோன்மென்ட் ஸ்டேட் பாங்க் ஆபிசர்ஸ் காலனிக்கு செல்லும் வழியெங்கும் தோரணங்கள், வாழை மரங்கள், கட்சிக் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.