திருச்சி: ரயில் பயணிகள் பாதுகாப்புக்குழுவினர் கடந்த 17ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்களில் தூய்மை, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக, பயணிகளின் கருத்துகளைப் பெற்று ரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் இறுதி நாளாக இன்று(மே 20), திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில், பயணிகள் பாதுகாப்புக் குழுவினர் நடைமேடை, காத்திருப்பு அறை, ஐஆர்சிடிசி பயணிகள் தங்குமிடம், கழிப்பறை, உணவகங்களில் ஆய்வு செய்தனர். பின்னர், பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா? அல்லது குறைகள் உள்ளனவா? என்றும் பயணிகளிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குழுவின் உறுப்பினர்கள் ஜெயந்திலால் ஜெயின் மற்றும் மோகன்லால் கிஹாரே ஆகியோர் கூறுகையில், "திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கான பாதுகாப்பு, அனைத்து அடிப்படை வசதிகளும் முறையாக செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக திருச்சி ரயில் நிலையம் சிறப்பாக உள்ளது. பயணிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளும் நல்ல முறையிலேயே உள்ளன.
திருச்சி முதல் தஞ்சை வரையிலான குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயிலிருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்கவும், திருச்சியிலிருந்து பல்லவன் விரைவு ரயிலை இயக்குவது உள்ளிட்ட திருச்சி பயணிகளின் பல்வேறு கோரிக்கைகள் வரும் 27-ம் தேதி டெல்லியில் நடைபெறும் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்படும்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க:வந்தே பாரத் ரயில்களின் உற்பத்தியை ஆய்வு செய்த மத்திய அமைச்சர்!