திருச்சி: வையம்பட்டி அடுத்த கே.புதுக்கோட்டையைச் சேர்ந்த இளையராஜா (34) , இவர் மொண்டிபட்டியைச் சேர்ந்த தவக்கிரேட் (எ) கற்பகம் (29) என்பவரை கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கற்பகம் தனது கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகக் கூறி, கடந்த மாதம் தனது தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் இருபது நாட்களுக்கு முன் அவரது தாயார், உறவினர்கள் கற்பகத்திடம் சமரசம் பேசி கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பின்னர் நேற்று முன்தினம்(ஜன.28) இரவு நடந்த பிரச்னையில் கற்பகம் தூக்கில் தொங்கிவிட்டதாக இளையராஜா, கற்பகத்தின் அக்காவிற்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கற்பகத்தின் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்துள்ளனர்.