தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்ரீரங்கத்தில் தீபா பேரவை தாய் கழகத்தில் இணையும் விழா ரத்து - தாய் கழகத்தில் இணையும் நிகழ்வு

திருச்சி: அதிமுகவில் உள்ள கோஷ்டி பூசல் காரணமாக ஜெ. தீபா பேரவையினர், தாய் கழகமான அதிமுகவில் இணையும் விழா ரத்து செய்யப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அம்மா தீபா பேரவை

By

Published : Aug 9, 2019, 2:26 AM IST

ஜெ.தீபா அம்மா பேரவை திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்தவர் ஆர்.சி கோபி. இவர் சில தினங்களுக்கு முன்பு இப்பேரவையிலிருந்து விலகி, அதிமுகவில் இணைவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ப. குமாரைச் சந்தித்து கட்சியில் இணைவது குறித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து, இன்று ஸ்ரீரங்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தாய் கழகத்தில் இணையும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக கொடி, தோரணங்கள், பேனர், கட் அவுட்டுகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

ரத்தான அம்மா தீபா பேரவை, தாய் கழகத்தில் இணையும் நிகழ்வு

விழா அரங்கிற்குள் தீபா பேரவையினர் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம், அதிமுக பகுதிச் செயலாளராக உள்ள டைமண்ட் திருப்பதி என்பவர், தன்னைக் கேட்காமல் கோபியைக் கட்சியில் சேர்க்கக்கூடாது. அதோடு இந்த விழாவிற்கான ஏற்பாடுகளில், தனது பெயர் இல்லை என்று கூறி விழாவிற்கு வரும் மாவட்டச் செயலாளரை குமாரை முற்றுகையிட, தனது ஆதரவாளர்களுடன் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் திரண்டிருந்தார்.

இந்த தகவல் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாவட்டச் செயலாளர் குமார் ஆகியோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் விழாவை ரத்து செய்யுமாறு கோபியிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய கோபி, அமைச்சர்களுக்குத் தலைமையிலிருந்து அழைப்பு வந்திருப்பதால், சென்னை சென்றுள்ளனர். இதனால் விழா ரத்து செய்யப்பட்டது. அடுத்து விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறிவிட்டு வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார்.

இந்த தகவலை அறிந்த ஆர்.சி. கோபியின் ஆதரவாளர்கள் அமைச்சர்களைக் கண்டித்து ,அம்மா மண்டபம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களைத் திருப்பி அனுப்பினர். இன்றைய பிரச்னைக்கு காரணமான டைமண்ட் திருப்பதி என்பவர் அமைச்சர் வளர்மதியின் தீவிர ஆதரவாளர். அவரது தூண்டுதலின் பேரில்தான், மாவட்டச் செயலாளர் குமார் காரை மறிக்க ஆதரவாளர்களைத் திரட்டி இருந்ததாகத் தீபா பேரவையினர் தெரிவித்தனர்.

மேலும் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, மாநகர் மாவட்டச் செயலாளர் குமார் ஆகியோர் இடையே நிலவி வரும் உச்சக்கட்ட கோஷ்டிப் பூசல் ஆக இந்த விழா ரத்து சம்பவத்தை அதிமுகவினர் பார்க்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details